மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவு

214 0

மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைப் போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென, கடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவந்த மக்கள், நேற்று (08) மாலை, தங்களது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திக்கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஞாயிறன்று (07) நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளைத் திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு, அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே, இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் மூலம் காணப்பட்ட இணக்கம் தொடர்பில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் நேரில் சென்று தெளிவுபடுத்திய அமைச்சர்கள், தங்களால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தனர். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவொன்று கிடைக்குமென்ற நம்பிக்கையை வெளியிட்டு, அரசியல் முக்கியஸ்தர்களும் சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மத்தியில் உரையாற்றினர்.