நெல்லையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்ட 1000 கோடி பழைய ரூபாய்

255 0

நெல்லையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 1000 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. பாதுகாப்புக்காக 13 போலீசார் அந்த பெட்டியில் சென்றனர்.

கடந்த நவம்பர் 8ந் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வசமிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கு பதிலாக, செல்லும் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டனர்.

தபால் நிலையங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் ஏராளமானோர் வங்கி, தபால் அலுவலகங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள்.

இவ்வாறு பெறப்பட்ட சுமார் 1000 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி அனுமதிக்காக அந்தந்த வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று அவை அந்தந்த வங்கிகளில் இருந்து எடுத்து வரப்பட்டு நெல்லை ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த பிரத்யேக பெட்டியில் ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டன. அதன்பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அந்த பெட்டி இணைக்கப்பட்டது.

பின்னர் அது பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டன. பாதுகாப்புக்காக நெல்லை மாநகர ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் வடிவேல், இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் 13 போலீசார் அந்த பெட்டியில் சென்றனர்.

இவர்கள் தவிர ரெயில்வே மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அந்த ரெயிலில் பாதுகாப்புக்கு சென்றார்கள். பணம் இருந்த பெட்டியில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதனை சென்னையில் இருந்து போலீசார் கண்காணித்தபடியே இருந்தனர்.