நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது

422 0

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெற உள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது என்று தமிழ்வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவி கோமதி தெரிவித்தார்.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெற உள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது என்று தமிழ்வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவி கோமதி தெரிவித்தார்.

இதுவரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றுவந்த மருத்துவ படிப்புக்கு, இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும். எனவே சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நன்றாக படித்து, 2 ஆண்டுகளாவது நீட் தேர்வுக்காக பயிற்சியும் எடுத்தவர்கள் தான் இதில் அதிக மதிப்பெண் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு நீட் தேர்வு சிரமம் என்று கூறப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வை தமிழ் வழியில் படித்த பல மாணவர்களும் எழுதியுள்ளனர். அவர்களில் சிலரால் நீட் தேர்வை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை.

தமிழ் வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவி கோமதி கூறியதாவது:-

சென்னை நெற்குன்றத்தில் வசித்து வருகிறேன். அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். எஸ்.எஸ்.எஸ்.சி. தேர்வில் 500-க்கு 466 மதிப்பெண் பெற்றேன். பின்னர் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்தேன்.

எனது படிப்புக்கு தந்தை மூர்த்தி, தாய் எம்.ஆதிலட்சுமி ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நான் நீட் தேர்வு எழுத எனது பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பா மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். நான் நீட் தேர்வை அடையாறு பாலமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தமிழில் எழுதினேன்.

நீட் தேர்வு எழுத வேண்டியநிலை வந்ததால் தமிழகத்தில் கிராமப்புறத்தில் படித்த மாணவர்கள் பலருக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற நிலை போய்விட்டது. பயிற்சி கட்டணம் ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்றதால் எனக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் கட்டணம் செலுத்தி படிக்க முடியவில்லை.

கிராமப்புறங்களில் இதற்கான பயிற்சி மையங்களும் இல்லை. ஏழைகள் நகர்ப்புறங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்களால் சரியாக எழுத முடிந்திருக்காது.

நீட் தேர்வில் 11-ம் வகுப்பு பாடங்களில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன. வேதியியல் கேள்விகள் சில கடினமாக இருந்தன. இயற்பியல் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. மொத்தத்தில் நன்றாக எழுதி உள்ளேன்.

எனவே எனக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதே என் கருத்து. நீட்தேர்வால் கிராமப்புறத்தில் படித்த ஏழை மாணவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்தது.இவ்வாறு கோமதி கூறினார்.