தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது

443 0

டி.டி.வி.தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது என்று மேலூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. (அம்மா) அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணியில் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவாளர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் முதன் முதலாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.வும், பொதுக்குழு உறுப்பினருமான ஆர்.சாமி தலைமை தாங்கினார்.

தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோர் பேசினர். நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

அ.தி.மு.க. கட்சியை காப்பாற்றியது சசிகலாதான். அவர் இல்லை என்றால் அ.தி.மு.க.வே இல்லை. 30 ஆண்டுகள் வாழ்க்கையை தொலைத்து விட்டு கட்சியை வளர்த்தவர் சசிகலா. முகம் காட்டாமலே அவர் அ.தி.மு.க.வை வழி நடத்தினார். விசுவாசத்தின் அடையாளமாக அவர் இருந்தார்.

சசிகலாவின் தயவால் பலர் அமைச்சர்களாக ஆனார்கள். அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வத்தை உருவாக்கியவர். அவரை முதல்வராக்கியவர் சசிகலா தான். ஜெயலலிதா இறந்ததுமே முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுடன் கைகோர்த்தார். ஒரே குரலில் இருவரும் பேசினர். அதனால் ஓ.பி.எஸ். முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இங்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பம்தான். நெல்லை, தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை கட்சியினரை திரட்டுவோம். தினகரன் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறும்வரையும், அவரை விடுதலை செய்யும் வரையும் போராட்டம் ஓயாது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு என்பது ஆயுதங்களுக்கே அவமானம். ஓ.பி.எஸ். மக்களை சந்திக்கக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.