பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

240 0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த கூட்டு உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜுலை ஐந்தாம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான இளயத்தம்பி தம்பையா இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
நீதியரசர் துரைராஜா தலைமையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான சட்ட மா அதிபர், தொழில் ஆணையாளர், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள், 22 தோட்ட நிறுவனங்கள், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், ஆட்சிசேபனை மனுவைத் தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசத்தை கோரினர்.
எனினும் இது தேசிய பிரச்சினை என்ற அடிப்படையில், சமரசமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்ட நீதியரசர், நீதிமன்ற விவாதத்துக்கு உட்படுத்தி இந்த பிரச்சினையைத் தீர்ப்பது, நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல எனவும் கூறினார்.
சமரச தீர்வின் மூலம் தீபாவளி பண்டிகைக் காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைமையை தவிர்க்க முடியும் என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.