இலங்கையர்களை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்ப உதவிய பிரித்தானிய யுவதி

227 0

இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

ஜூலி ஏன் வார்னர் (Julie Ann Warner) என்ற பிரித்தானிய யுவதி மற்றும் அண்மையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கைத் தரகரான இராயப்பன் தேவக்குமரன் ஆகிய இருவருமே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை முகவர் தேவக்குமரன் சென்னை அதிகாரிகளால், கடந்த 5ம் திகதி சஹார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இவ் வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆறு இலங்கையர்களை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நான்கு இலங்கை பிரஜைகளை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த மற்றுமொரு இலங்கை முகவரான, மகாமுனி யோகராஜ் மற்றும் இந்திய முகவரான ராஜன் என்பவரும் இது தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.