நீட் தேர்வு முடிவு வெளியாகும்போது மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்: திருமாவளவன்

300 0

நீட் தேர்வு முடிவு வெளிவரும்போது மாணவர்களால் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் பிரச்சனை மற்றும் விவசாயிகள் போராட்டத்திற்கு எந்த முடிவையும் இதுவரை மத்திய அரசு எடுக்காததது அதிர்ச்சியளிக்கிறது. எனவே மத்திய அரசு இந்த பிரச்சனையில் ஒரு நிரந்த தீர்வு கிடைக்கும் வகையில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிவாரணத்திற்கும், குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவும் நிதியினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் எடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கினை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தலித் மக்கள் மீது வன்முறை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தலித் மக்கள் தாக்குதல் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே காவல் துறையினர் பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மணல் குவாரிகளை தமிழக அரசு ஏற்று நடத்தும் என்பது வேடிக்கையாக உள்ளது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தும் என்றார். ஆனால் மணல் குவாரிகள் தனியார் ஒப்பந்தகாரர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது இன்னும் 3 ஆண்டுகளில் மணல் குவாரிகள் மூடப்படும் என முதல்வர் எடபாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும். கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆற்றுமணல் அள்ளப்படவில்லை. ஆனால் தமிழகத்திலிருந்து மணல் எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

எனவே ஆற்று மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும். “எம்ஷேண்டு” என்கிற கல்குவாரியிலிருந்து கற்களை உடைத்து தயாரிக்கும் மணல் திட்டமான செயற்கை மணல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு சுதந்திரமாக, முழுமையாக செயல்படுவதில் பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு இருப்பது கண்டிக்கதக்கது. மத்திய அரசு தமிழக அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி பாரதிய ஜனதா கட்சி கால் ஊன்ற முயற்சிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அதன் 5 ஆண்டு கால ஆட்சி நடைபெறவேண்டும். ஆனால் தமிழக அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது.தமிழகத்தில் இளைய தலைமுறையினை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் மதுக்கடைகளை மூடுவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் மூடப்படும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி ஏற்றவாறு அரசு பணியில் அமர்த்த வேண்டும்.

நீட் தேர்வில் சோதனை என்ற பெயரில் பெரும் அவமதிக்கும் செயல் நடந்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். நீட் தேர்வு மிக கடினமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் நீட் தேர்வு முடிவு வெளிவரும்போது மாணவர்களால் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவரிடம் அமைச்சர் காமராஜ் மீதான வழக்குப்பதிவு குறித்து கேட்டபோது, கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.