தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்

305 0

போடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்டு அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் முதல்- அமைச்சரும், போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதன்பிறகு தேனியில் கட்சி பிரமுகர் ஒருவரின் வீட்டு விஷேசத்தில் பங்கேற்றார். மதியம் 2.30 மணிக்கு போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து தங்கினார்.அதனைத் தொடர்ந்து மாலையில் கட்சி நிர்வாகிகளையும், பொது மக்களையும் சந்தித்து ஆலோசனைகள் கேட்டார். அப்போது 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க வந்தனர். அவர்கள் தொகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் அதனை நிறைவேற்றி தருமாறும் அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்களையும் ஓ.பன்னீர் செல்வம் வாங்கிக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.போடி எம்.எல்.ஏ. அலுவலக நுழைவாயிலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயருக்கு கீழே நிதி மற்றும் திட்டத்துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவர் அமைச்சராக இல்லை என்றபோதிலும் பெயர் பலகை மாற்றப்படாமல் இருந்தது.

இதனை கவனித்த ஓ.பன்னீர்செல்வம் அதனை மறைக்கும்படி தொண்டரிடம் கூறவே பெயர் பலகையில் இருந்த நிதி மற்றும் திட்டத்துறை அமைச்சர் என்ற எழுத்துக்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது.ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது தற்போது பேட்டி வேண்டாம் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இன்று தேனி மாவட்டத்தில் வருசநாடு, பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் மாலை சென்னை புறப்படுகிறார்.