மஹிந்தவுக்கு இணையாக எனக்கும் பாதுகாப்பு வேண்டும்: சந்திரிக்கா

248 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இணையாக தமக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படுவது குறித்து ஒன்றிணைந்த எதிரணி சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியதாக அவர் கூறியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷவுக்கு நினைவூட்ட வேண்டும்.

அதனால் அவருக்கும் தமக்கும் இடையில் வித்தியாசம் இல்லை. இருவருக்கும் ஒரே பாதுகாப்பே வழங்கப்பட வேண்டும் என சந்திரிக்கா கூறியுள்ளார்.இலங்கை அரச படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது 2005 ஆம் ஆண்டு தாம் ஓய்வு பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை மீட்கவும், புலிகளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு என்ற சிறிய பிரதேசத்துக்குள் முடக்கவும் தமது தலைமையிலான அரசாங்கமே தலைமைத்துவம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தாம் ஓய்வுபெற்றதன் பின்னர் புலிகளால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஓய்வுபெற்றதன் பின்னர் தமது பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு சபையின் விசேட குழுவொன்று ஆராய்ந்ததாக குறிப்பிட்டுள்ள அவர்,இதன்போது தேவையான ஆயுதங்களுடன் 300 பாதுகாப்புத் தரப்பினரை வழங்க வேண்டும் என அந்த விசேட குழு பரிந்துரை செய்ததாகவும், அந்த பரிந்துரையை தாம் நிராகரித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

அரசின் செலவுகளைக் குறைக்கும் தமது சாதாரண கொள்கையை கடைப்பிடித்து பாதுகாப்புத் தரப்பினர் 300 பேர் அவசியமில்லை என்றும், 10 பாதுகாப்பு வாகனங்களுடன், 150 பாதுகாப்புத் தரப்பினர் போதுமானது எனத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

தாம் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றபோது புலிகளின் அச்சுறுத்தல் தமக்கு இருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தமது பாதுகாப்புக்கு தற்போது 40 பாதுகாப்புத் தரப்பினர் உள்ளதாகவும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.