போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அவர் மதம் கடந்து மக்களை நேசித்தவர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த போப் பிரான்சிஸின் மறைவு அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
போப் பிரான்சிஸ் இரக்கமிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தியவர்.
மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத்தந்தன. அவரது மறைவால் தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பழனிசாமி (அதிமுக): பிரான்சிஸின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்பு, அமைதி, ஒற்றுமை சார்ந்த தனது கருத்துக்களால் லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது.
நயினார் நாகேந்திரன் (பாஜக): வாழ்நாள் முழுவதும் ஆன்மீக சேவைக்காகவும், சமூக சமத்துவத்துக்காகவும், மத நல்லிணக்கத்துக்காகவும் அயராது உழைத்த போப் பிரான்சிஸின் ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாறட்டும்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): கத்தோலிக்க மதத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டு வந்த போப் பிரான்சிஸின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ராமதாஸ் (பாமக): உலக மக்களிடம் எல்லையில்லாத அன்பும், கருணையும் காட்டிய கத்தோலிக்க மக்களின் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் காலமான செய்தியறிந்து அதிர்ச்சி தருகிறது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது.
வைகோ (மதிமுக): உலகெங்கிலும் வாழ்கிற கோடான கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவு செய்தி மிகப்பெரும் துக்கத்தைத் தருகிறது.
அண்ணாமலை (பாஜக): அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்காக போப் பிரான்சிஸ் ஆற்றிய தன்னலமற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூறப்படும்.
அன்புமணி (பாமக): போப் பிரான்சிஸ், தனது 12 ஆண்டு பதவிக்காலத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டவர். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்.
ஜி.கே.வாசன் (தமாகா): போப் பிரான்சிஸ் எழை, எளிய மக்கள் வாழ்வில் உயரவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டவர். அவரது இழப்பு உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ மக்களுக்கு பேரிழப்பாகும்.
சீமான் (நாதக): மதம் கடந்து மண்ணையும், மக்களையும் நேசித்த மாமனிதர் போப் பிரான்சிஸ். போற்றுதலுக்குரிய அவருக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்.
டிடிவி தினகரன் (அமமுக): போப் பிரான்சிஸ் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
விஜய் (தவெக): போப் பிரான்சிஸின் மறைவு, அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): போப் பிரான்சிஸ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். இவர்களுடன் முன்னாள் எம்பி சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.