நாங்கள் கூட்டணி வைத்தால் முதல்வர் ஏன் பதறுகிறார்? அதிமுக வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும், திமுகவை வீழ்த்தும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்சி மாவட்டம் உறையூர் பகுதிகளில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்து வந்ததால் பலர் பாதிக்கப்பட்டதுடன், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அப்பகுதிக்கு அருகே நடைபெற்ற சித்திரை திருவிழாவில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டதாகவும், அதை குடித்த காரணத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சித்திரை திருவிழாவுக்கு இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும்தான் சென்றார்களா? தவறான செய்தியை அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு குறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. ‘நீட்’ தேர்வு கடந்த 2010 டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டாட்சி. திமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தது.
அதுவும் திமுகவின் காந்தி செல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த போதுதான் நீட் தேர்வுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு, மத்திய அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக தொடர்ந்து தவறான செய்தியை முதல்வரும், அமைச்சர்களும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணிதான். அதை தடுப்பதற்கு அதிமுக கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டது. அதனால் நீட் தேர்வை அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. அதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்தது அதிமுக. மேலும் 2010-ம் ஆண்டில் நீட் தேர்வை கொண்டு வரும்போதே அதை திமுக ரத்து செய்திருந்தால் இவ்வளவு உயிர்சேதங்களும் ஏற்பட்டிருக்குமா? இதற்கெல்லாம் முழுக்காரணம் திமுகதான்.
அதேபோல் எப்போது பார்த்தாலும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக – பாஜக கூட்டணி பற்றியே பேசுகின்றனர். இன்றைக்கும் கூட சட்டப்பேரவையில் முதல்வர் துடிதுடிக்க பேசுகிறார். நாங்கள் கூட்டணி வைத்தால் முதல்வர் ஏன் பதறுகிறார்? கோவப்படுகிறார்? ஏன் பயப்படுகிறார்? அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். அது எங்களுடைய விருப்பம். அது எங்களுடைய கட்சி. ஆனால் முதல்வர் இப்படி ஆதங்கப்படுவதை பார்க்கும்போது அவருக்கு பயம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
பாஜகவுடன் 1999-ல் திமுக கூட்டணி அமைக்கும்போது, “ஊழலைவிட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல” என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னார். அப்போதெல்லாம் பாஜகவுடன் இணைந்து பணியாற்றியபோது திமுகவுக்கு இனித்தது. இப்போது கசக்கிறது.
திமுக – பாஜக கூட்டணி ஆட்சியின்போது முரசொலி மாறன் ஓராண்டு காலம் நோய்வாய்பட்டு, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இலாக்கா இல்லாத அமைச்சராக அவரை வைத்திருந்தனர். அப்போது எல்லாம் திமுகவுக்கு பாஜக நல்ல கட்சியாக தென்பட்டது.
அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டால், ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சியை இழக்கும் என்று அவர் மனதில் வந்த காரணத்தாலே இந்த வெளிப்பாடு முதல்வரிடத்தில் இருந்து வந்திருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற காரணத்தினாலே ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைக்கின்றன.
அந்த வகையில் திமுகவை அகற்ற வேண்டும் என்கிற கருத்துடைய கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து, வாக்குகள் சிதறாமல், பலம் வாய்ந்த கூட்டணியை 2026 தேர்தலில் அதிமுக அமைக்கும். திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தும். இவ்வாறு அவர் கூறினார்.