ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஆனால் ஆட்சியேற்று 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை சூத்திரதாரியை இந்த அரசாங்கத்தால் இனங்காண முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ஏமாறப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராகக் காணப்பட்டார். 2018இல் ரஞ்சித் மத்தும பண்டார அந்த அமைச்சுப்பதிவியிலிருந்து நீக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேன, அவரது அதிகாரிகள், புலனாய்வுப்பிரிவின் பிரதானி உள்ளிட்டோரின் தவறால் இந்த சதித்திட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.
நாட்டில் பாரிய அழிவொன்று ஏற்பட்டது. அனைத்து இன மக்களும் இந்த அழிவால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியையே எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டவர்கள் உட்பட நாட்டிலுள்ள மூவின மக்களும் இந்த சதியால் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும்.
தாம் ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஆனால் ஆட்சியேற்று 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை சூத்திரதாரியை இந்த அரசாங்கத்தால் இனங்காண முடியாமல் போயுள்ளது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை நான் வெளிப்படுத்துவேன் என மார்ச் 21ஆம் திகதி ஜனாதிபதி கூறினார்.
ஆனால் இன்று இது தொடர்பில் முழுமையான தகவல்களை தன்னால் கூற முடியாது என்றும், விசாரணைகள் சற்று தாமதமடையும் என்றும் கூறுகின்றார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளித்துள்ளமையை பெரிய விடயமாக அவர் கூறிக் கொண்டிருக்கின்றார். கடந்த 6 மாதங்களில் இவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கவில்லையா? 180 நாட்களாக இதனை மாத்திரமா செய்து கொண்டிருந்தனர்?
இந்த அறிக்கைகளை ஏற்கனவே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதில் சில பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில் அதனை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிப்பதன் ஊடாக ஜனாதிபதி என்ன கூற முற்படுகின்றார்? அரசாங்கத்தின் இதுபோன்ற நாடகங்களுக்கு இனியும் மக்கள் ஏமாறப் போவதில்லை என்றார்.