“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் புனித தந்ததாது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு கண்டி நகர எல்லைக்குள் மொத்தம் 820 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை கண்டி மாநகர சபையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அதிகளவான யாத்திரிகர்கள் வருகை தருவதால் தானசாலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாத்திரிகர்களுக்கு சேவை செய்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு கண்டி மாவட்ட செயலகம், ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் கண்டி நாத தேவாலயா ஆகியவற்றால் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த கூறுகையில்,
மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டுகின்றது. இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் உணவு தயாரிக்கப்படுகின்றது.
கண்டி வாவியை சுற்றியுள்ள வீதியில் இரவு தங்கியிருந்த யாத்திரிகர்களுக்கு மாவட்ட செயலாளரின் தலைமையில் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.