அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது

367 0

201607300801353542_Defamation-case-Anticipatory-bail-conditions-relaxed-to_SECVPFஅவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடந்த ஏப்ரல் 1-ந் தேதி திருப்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, தமிழக முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, பிரேமலதாவுக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி, திருப்பூர் குற்றவியல் கோர்ட்டில், ஆஜராகி ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். அதன்பின்னர் சென்னை விருகம்பாக்கம் போலீசில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பிரேமலதா மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பிரேமலதாவுக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், பிரேமலதா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருப்பூர் கோர்ட்டில் ஜாமீன் உத்தரவாதம் கொடுத்து, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பிரேமலதா கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி ஐகோர்ட்டில் பிரேமலதா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி நேற்று உத்தரவிட்டார்.