தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் 23 ஆயிரம் வீட்டு மனை ‘லே-அவுட்’கள்

286 0

தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ள மொத்தம் 23 ஆயிரம் லே-அவுட்களில் 3 ஆயிரத்து 610 லே-அவுட்கள் பெரு நகரத்திலும், 3 ஆயிரத்து 571 லே-அவுட்கள் நகரத்திலும், 2 ஆயிரத்து 261 லே-அவுட்கள் டவுன் பஞ்சாயத்திலும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் வீட்டு மனைகள் பிரிப்பது தொடர்பாக வரை முறைகளை உருவாக்கி புதிய ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அங்கீகாரம் பெறாமல் உள்ள வீட்டுமனைகளை வாங்கியவர்களுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரத்து 274 வீட்டு மனை லே-அவுட்கள் அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில், 13 ஆயிரத்து 932 லே-அவுட்கள் கிராம பகுதிகளில் உள்ளன. அதாவது அனுமதி பெறாத 60 சதவீத லே-அவுட்கள் கிராம பகுதிகளில் போடப் பட்டுள்ளன. இவை 3 ஆயிரத்து 623 கிராம பஞ்சாயத்துகளிலும், 321 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும் அடங்கி உள்ளன.

அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ள மொத்தம் 23 ஆயிரம் லே-அவுட்களில் 3 ஆயிரத்து 610 லே-அவுட்கள் பெரு நகரத்திலும், 3 ஆயிரத்து 571 லே-அவுட்கள் நகரத்திலும், 2 ஆயிரத்து 261 லே-அவுட்கள் டவுன் பஞ்சாயத்திலும் இருக்கின்றன.

மாநிலத்திலேயே கோவையில் தான் அதிக அளவில் அனுமதி பெறாத லே-அவுட்கள் போடப்பட்டு இருக்கின்றன. அங்கு 156 கிராம பஞ்சாயத்து, 12 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் 1510 லே-அவுட்கள் இருக்கின்றன.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்கு அனுமதி பெறாத லே-அவுட்கள் எதுவும் போடப்படவில்லை. ஆனால், நகரை ஒட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அனுமதி பெறாத லே-அவுட்கள் பல இருக்கின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்துகளில் 131 லே-அவுட்கள் அனுமதி பெறாமல் உள்ளன. இதில், 7 ஆயிரத்து 160 பிளாட்டுகள் இடம் பெற்றிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் 58 அனுமதி பெறாத லே-அவுட்கள் இருக்கின்றன. இதில் 4 ஆயிரத்து 565 வீட்டு மனைகள் உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பார்க்கும் போது 257 லே-அவுட்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 344 லே-அவுட்களும் அனுமதி பெறாமல் உள்ளன.

புதிய வரைமுறை காரணமாக அனுமதி பெறாத லே-அவுட்களும் முறைப்படுத்தப்படும். இதன் மூலம் இதை வாங்கியவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும். அந்த வீட்டு மனைகளும் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.