கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி அந்த பெண்ணுடன், கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் கடத்திச்சென்று கொலை செய்தது.
இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட பலரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யுவராஜ் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு அவருக்கு கடந்த மே மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
யுவராஜூக்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆணவக்கொலை தொடர்பான வழக்கில் யுவராஜ் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். தீரன் சின்னமலை பேரவை என்னும் அமைப்பின் தலைவராக இருக்கும் அவர், அந்த அமைப்பு மூலம் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இவர் ஜாமீனில் வெளியில் இருக்கும் சூழலில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் அவரால் தாக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க எந்த முகாந்திரமும் இல்லை.
அவருக்கு ஜாமீன் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐகோர்ட்டு கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.