பிஎஸ்பி கட்சி பொறுப்பில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்?

22 0

பகுஜன் சமாஜ் கட்சிப் பொறுப்பில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு, சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தனும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியானது. இதுதொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெளியிட்ட அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் உத்தரவுப்படி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தனது குடும்பத்தையும், குழந்தையையும் கவனித்துக் கொள்வார். முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார். இனி அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டார். அவரது குடும்பத்துக்கு கட்சி துணை நிற்கும்” என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இதற்கு மறுப்பு தெரிவித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: என்னை நீக்க மாநிலத் தலைவரான ஆனந்தனுக்கு அதிகாரமில்லை. இவ்வாறு அவதூறு பரப்பிய மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர், ஆனந்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்னையும் குழந்தையையும் வீட்டில் இருக்குமாறும், வழக்கை மட்டும் கவனிக்குமாறும் கூறுகின்றனர். இது முறையல்ல. அப்படியானால் ஆனந்தன் எதற்கு பொறுப்பில் இருக்க வேண்டும்?

இந்த விவகாரத்தை தலைமைக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன். பொறுமையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். தலைவரை எந்த கேள்வியையும் கேட்கக் கூடாது என நினைக்கின்றனர். அவர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறி பொறுப்புக்கு வந்தார். ஆனால், அவர் ஏன் எடுத்துச் செல்லவில்லை? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தித் தொடர்பாளர் முத்துக்கிருஷ்ணன் கூறும்போது, “கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரை நீக்குவது தொடர்பாக லெட்டர் பேட் இல்லாத வெற்று காகிதத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த மத்திய ஒருங்கிணைப்பாளருக்கு நாங்கள் யாரென்று கூட தெரியாது. கூட்டத்துக்கு வந்த அவரை மிரட்டியோ, பண பலத்தைப் பயன்படுத்தியோ இத்தகைய உத்தரவை பிறப்பிக்குமாறு செய்துள்ளனர்” என்றார்.