மாநில சுயாட்சி அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை: திமுக என்ற கட்சி தொடங்கியதே தேச பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்றுவரை, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் பிரிவினையை தூண்டுவதாகத்தான் அமைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் மாநில சுயாட்சி என்ற முகமூடி. திமுகவின் இந்த பரிந்துரைகள் அனைத்தும் மாநில சுயாட்சிக்கானவை அல்ல.
பல வழிகளில் ஊழல் செய்யவும், அந்த ஊழல்கள் எவ்வித விசாரணைக்கு உள்ளாகாமல், தப்பித்துக் கொள்ள இதுபோன்ற பல பரிந்துரைகள் ராஜமன்னார் குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
திமுக ஆட்சியின் சீர்கேட்டை மறைக்க, வாரம் ஒரு நாடகமாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் பிரிவினைவாதத்தை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை உணர வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழக மக்களும் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசை குறை கூறி, மாநில வளர்ச்சியில் மத்திய ஆட்சியின் பங்கை மறைத்து, எதிரிக்கட்சியாக நினைத்து சட்டப்பேரவையில் மாநில சுயாட்சிக்கு அறிவிப்பு வெளியிட்டிருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
குறிப்பாக மாநில சுயாட்சியை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய குழு அமைக்கப்படுவதும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும் என்பதும் தமிழக அரசின் தேவையற்ற, முறையற்ற செயல்பாடுகளில் ஒன்றாகும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாநில சுயாட்சி அறிவிப்பு ஏற்புடையதல்ல. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.