ரேவதி, பொன்னிக்கு ‘சிறந்த திருநங்கை’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

16 0

2025-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை ரேவதி மற்றும் பொன்னி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாக 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘சிறந்த திருநங்கை’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதானது திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு, சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு வழங்கப்படுகிறது. சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவால் தேர்வு செய்யப்படும் இந்த விருதாளருக்கு, திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி விருது வழங்கப்படுகிறது. விருதாளருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சேவை மற்றும் சாதனைகளை பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.ரேவதியின், சிறந்த சமூக சேவையைப் பாராட்டியும், திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை க.பொன்னியின் சிறந்த சமூக பங்களிப்பைப் பாராட்டியும், தமிழக அரசின் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலர் நா. முருகானந்தம், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையர் ஆர்.லில்லி ஆகியோர் பங்கேற்றனர்.

‘மாண்பை உறுதி செய்வோம்’ – தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘ஏப்.15 – தேசிய திருநங்கையர் தினம். புறக்கணிப்புக்கும் ஏளனங்களுக்கும் ஆனான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து நாட்டிலேயே முதன்முறையாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கருணாநிதி.

கட்டணமில்லா பேருந்து பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும். புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல் படையில் திருநர்கள் என அதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் திராவிட மாடல் அரசு. திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதி செய்வோம்’ என தெரிவித்துள்ளார்.