புதிய திருத்தங்களுடன் சேவை வரி மசோதா

400 0

201607300649152360_new-service-tax-bill-with-amendments-in-parliament_SECVPFபுதிய திருத்தங்களுடன் சேவை வரி மசோதா அடுத்த வாரம் மேல்-சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் ஒரே மறைமுக வரிவிதிப்பை கொண்டுவரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதா (ஜி.எஸ்.டி. மசோதா) கடந்த ஆண்டே பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள 1 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரசின் இந்த எதிர்ப்பாலும், மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு போதிய மெஜாரிட்டி இல்லாததாலும் மேல்-சபையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த 1 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்வது, ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால், அதை ஈடுசெய்ய 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு அளிப்பது போன்ற திருத்தங்களுக்கு கடந்த 27-ந் தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த திருத்தங்களுடன் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மேல்-சபையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்றத்தின் அடுத்த வார நிகழ்ச்சி நிரலை நேற்று மேல்-சபையில் அறிவித்த பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, அப்போது இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மசோதாவில் காங்கிரஸ் கூறிய முக்கியமான திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில் மேல்-சபையில் மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மேல்-சபையில் மசோதா நிறைவேறினால் மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.