கம்பளை பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட 02 வருடமும் 08 மாதங்களுடைய குழந்தை மட்டக்களப்பு, கரடியணாறு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரடியணாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருகாமம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கம்பளை கஹவட வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 02 வருடமும் 08 மாதங்களுடைய குழந்தை ஒன்றும் இளைஞர் ஒருவரும் கடந்த 03ம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், குழந்தையை விடுவிப்பதற்கு 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குழந்தையின் உறவுக்கார இளைஞர் கண்டி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் கடத்தப்பட்ட குழந்தையும் இன்று காலை கரடியணாறு பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
குழந்தையை கடத்தியசாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர், குழந்தையை மறைத்து வைத்திருந்த கரடியணாறு பிரதேச பெண்ணொருவர் மற்றும் அந்தப் பெண்ணின் மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ஏனைய நபர்களை கைது செய்வதற்காக பொலிஸாரின் விசாரணை தொடர்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.