வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய படகுகளை விடுவிக்க கூடாது

349 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் விடுவிக்க கூடாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கூறியுள்ளது.

மேலும் வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறப்படாமல் இந்திய இழுவை படகுகளும், இந்திய மீனவ ர்களும் விடுவிக்கப்பட்டால் வடக்கில் மட்டுமல்லாமல் தெற்கிலும் பாரிய போராட்டங்களை நடத்துவோம் எனவும், இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவது தொடர்பாக ஆக்கபூர்வமான பதிலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்திய பிரதமரின் வருகை மற்றும் இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந் து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

இணையத்தின் சார்பில் அதன் தலைவர் மு. ஆலம் மற்றும் உப தலைவர் ஜே. பிரன்சிஸ் மற்றும் செயலாளர் என்.வி.சுப்ரமணியம் ஆகியோர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இ லங்கை விஜயத்தின்போது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களையும், அவர்களுடைய இழுவை படகுகளையும் விடுவிப்பதற்காக அழுத்தம் கொடுக்கப்படலாம்.

இதேவேளை கடந்த மாதம் 5ம் திகதி கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, வடமாகாண கடற்றொழிலாளர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய இழுவை படகுகளும், இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் கூறியிருந்தார். அதன் பின்னர் பாராளுமன்றத்திலும் அதனையே அவர் கூறியிருந்தார்.

இதேவேளை கடந்த மாதம் 5ம் திகதி அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது 6 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். இந்திய இழுவை படகுகளால் அழிக்கப்பட்ட வடக்கு மாகாண மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அதேபோல் கைது செய்யப்பட்ட இந்திய இழுவை படகுகள் விடுவிக்கப்பட்டால் அவை மீளவும் இலங்கை கடல் எல்லைக்குள் வராது என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 நிபந்தனைகள் வழங்கப்பட்டிருந்தன.

அவற்றுக்கு ஆக்கபூர்வமான பதில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய இழுவை படகுகள் விடுவிக்கப்பட்டால் வடக்கில் மட்டுமல்லாமல் தெற்கிலும் அதாவது தலைநகரிலும் போராட்டங்கள் வெடிக்கும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.