மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 75 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுவரும் இந்த போராட்டம் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.
பட்டதாரிகளின் பிரச்சினைக்கு 95 வீத தீர்வு கிடைத்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஆசிரிய ஆளணி சுற்று நிருபத்தின் அனுமதி மட்டுமே தற்போது கிழக்கு மாகாணத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை பட்டதாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிருஷாந் தெரிவித்தார்.
இவற்றிற்கான அனுமதியை ஏனைய மாகாணங்கள் ஏற்கனவே பெற்று படிப்படியாக வெற்றிடங்களைப் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனையே கிழக்கு மாகாணம் தற்போது தாமதமாகப் பெற்றுள்ளமையை பட்டதாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ் அனுமதி பட்டதாரிகளின் அழுத்தத்தின் காரணமாகவே பெறப்பட்டுள்ளது என்பது எமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
ஆயினும் இவ் வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஊடாக மத்திய திறைசேரியின் அனுமதியைப் பெற வேண்டும்.
இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதும் ஆட்சேர்ப்பு தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கான அனுமதி கோரல் கிழக்கு மாகாண சபையால் இன்னும் அனுப்பப்படவில்லை என்பதை அனைத்துப் பட்டதாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திறைசேரி வெற்றிடங்களை முழுமையாக நிரப்புவதற்கான அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகளே வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிருஷாந் மேலும் தெரிவித்தார்.