தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங்களுக்குள் கழிவறைகளை கட்டி முடிக்கவேண்டும்

360 0

201607300802134474_3-months-to-complete-the-toilets-in-all-state-courts-High_SECVPFதமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங் களுக்குள் கழி வறைகளை கட்டி முடிக்கவேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வேங்கை ஐ.பிரகாஷ்ராஜ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் முறையான கழிவறை வசதிகளை செய்து தர அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளதா? அதை சுத்தம் செய்யும் ஊழியர்கள் உள்ளனரா? என்பது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலாளர் ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதேபோல, மாவட்ட செசன்சு கோர்ட்டு முதல் குற்றவியல் கோர்ட்டு வரை கழிவறை வசதிகள் எப்படி உள்ளது? எப்படி பராமரிக்கப்படுகிறது? என்பதை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி தலைமையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு, தமிழக பொதுப்பணித்துறை ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. பொதுப்பணித்துறை ஆய்வு அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, சென்னை மாநகரை தவிர தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் 320 கழிவறைகள், 320 துப்புரவு தொழிலாளர்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிக்கையின் அடிப்படையில், கழிவறைகளை கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளவேண்டும். கழிவறை கட்டுவது மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் செய்யவேண்டும்.

எனவே, இந்த பணிகள் அனைத்தையும் செய்து முடிக்க தமிழக பொதுப்பணித்துறைக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்குகிறோம். பணிகளை முடித்து விட்டு, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அப்போது பணிகள் முடிவடையாமல் இருந்தால், அதை எவ்வளவு நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இந்த பணிகளை எல்லாம் சட்டப்பணி ஆணைக்குழுவை சேர்ந்த நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிமன்றங்களில் கழிவறை வசதிகள் செய்து கொடுப்பது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். இந்த பணிகளை அனைத்தையும் முடித்துவிட்டு பொதுப்பணித்துறை வருகிற நவம்பர் 18-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.