புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்

12 0

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், புலிபாய்ந்த கல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு கோரி கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் அறிவித்தல் பதாகையொன்றை குறித்த பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் கடற்றொழிலாளர்கள் பன்நெடுங்காலமாக கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடி அமைப்பதற்கு பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முனைப்பு காட்டிவருகின்றனர்.

இந்தநிலையில் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இத்தகைய சூழலில் மீளவும், கடந்த ( 02.04.2025) அன்று குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்திருந்தனர்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக புலிபாய்ந்த கல் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வாடியை அகற்ற அப்பகுதியில் அறிவித்தல்களை காட்சிப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.