அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது. சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா தற்போது 145% ஆக உயர்த்தி உளள நிலையில், பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது. உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வரும் நிலையில், அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மோதல் குறிப்பாக இரு நாடுகளுக்கும் பரவலாக உலக நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனது வரி விதிப்பு மற்றும் சீனாவுக்கான வரி அதிகரிப்பை ட்ரம்ப் நியாயப்படுத்தி இருக்கிறார்.
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
“அவர்(சீன அதிபர்) நீண்ட காலமாக எனக்கு நண்பராக இருந்து வருகிறார். இரு நாடுகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும் ஏதாவது ஒன்றை இறுதியில் நாங்கள் உருவாக்குவோம் என்று நான் நினைக்கிறேன்.” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலில் தொடர்பு கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் போட்டி வரி விதிப்பை அடுத்து, முதலீட்டாளர்கள் அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் மீதான தங்கள் முதலீட்டை கைவிட்டுள்ளனர். இதினால், டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. இதனிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், அமெரிக்கா தாக்கப்படும்போது அதிபர் ட்ரம்ப் கடுமையாக பதிலடி கொடுப்பார் என்பது தெளிவாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஒருதலைப்பட்ச கொடுமைப்படுத்துதலை எதிர்ப்பதில் பெய்ஜிங்குடன் ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெய்ஜிங்கில் பேசிய அவர், “சீனாவும் ஐரோப்பாவும் தங்கள் சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஒருதலைபட்சமான கொடுமைப்படுத்துதல் நடைமுறைகளை கூட்டாக எதிர்க்க வேண்டும். இது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சர்வதேச நியாயத்தையும் நீதியையும் பாதுகாக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தக மோதலால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் இது உலகளாவிய மந்தநிலையைத் தூண்டக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.