தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,. தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைப்பதை இலக்காக கொண்டு செயல்படுவோம் என்று பாஜகவினரு்கு அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை வானகரத்தில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பு விழாவில், கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை பேசியதாவது:
நாட்டின் இறையாண்மைக்கு சோதனை வந்தபோதெல்லாம், அதை காப்பாற்றவும், குடும்ப ஆட்சியை தவிர்த்து நேர்மையானவர்களை மன்றத்துக்குள் அனுப்புவதற்கும், ஒரு நல்லாட்சியை அளிக்கவும் எப்போதும் பாடுபட்ட கட்சி பாஜக. சாதாரண தொண்டர்களை தலைவர்களாக்கி அழகு பார்த்து, அதன்மூலமாக வளர்ந்த கட்சி. வரும் 2026-ல் திமுகவை துடைத்தெறிந்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும். வேகத்தை குறைத்து, சரியான திசையில் செல்ல வேண்டும்.
அதன்படி, 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. உங்களை வழிநடத்தியதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நாம் செய்தாலும், பாஜகவின் தொண்டன் என்பது உச்சகட்ட பொறுப்பு என்பதை எப்போதும் சொல்வேன். அற்புதமான மனிதர்கள் இருக்கும் கட்சி இது. இன்று நாம் எல்லாரும் ஒன்றாக இணைந்து, ஒருமனதாக நயினார் நாகேந்திரனுக்கு பின்னால் அணிவகுத்து படையாக நின்று, 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க பாடுபடுவோம். இதையே நமது இலக்காக கொண்டு செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து தலைவர்கள் பேசியதாவது: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா: பாஜகவின் மாநில தலைவராக திறம்பட பணியாற்றிய அண்ணாமலை, அனுபவம் மிக்க நயினார் நாகேந்திரனிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியபோது எனக்கும் நயினாருக்கும் நல்ல நட்புண்டு. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பாஜக அதிசயமான கட்சி. மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து வேறுபட்ட கட்சி. அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் இணைந்து தமிழகத்தில் பாஜகவை வெற்றியின் இலக்கை நோக்கி இட்டுச் செல்ல காத்திருக்கிறார்கள். இது பாஜகவில் மட்டும் நடக்கும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். திமுக என்றால் தீயசக்தி, திமுக என்றால் ஊழல். திமுக தமிழகத்தில் வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட வேண்டும் என்ற அவசியத்தில் நாம் நிற்கிறோம். அடுத்த தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழகத்தில் திமுக ஆட்சி வேரறுக்கப்பட வேண்டும்.
தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக்: தமிழகத்தில் அகங்காரம் கொண்ட திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அவர்களை வீட்டுக்கு அனுப்பி அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். இதற்கு புதிய தலைவர் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் எண்ணிலடங்கா ஊழலை செய்ததைபோல அதனுடன் கூட்டணி வைத்திருக்க திமுகவும் ஏராளமான ஊழல், நில ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை செய்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத கூட்டணிக்கு 2026-ல் முடிவு கட்ட வேண்டும்.
தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி: மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்துக்கு வந்து 2026 தேர்தலுக்கான களத்தை அமைத்துக் கொடுத்துவிட்டார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமானால் நிர்வாகிகள் அனைவரும் பூத்களுக்கு சென்று உறுதிமொழி எடுத்து பணியாற்ற வேண்டும்.