பட்டலந்த விவாதத்தால் அரசாங்கத்துக்கே பாதிப்பு ஐ.தே.க.வின் தவிசாளர் வஜிர கூறுகிறார்

10 0

ஜனநாயகத்துக்கு தோட்டாவால் அச்சுறுத்தல் ஏற்படும்போது பெரும்பான்மையானவர்களின் விருப்பத்துக்கு அமைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் அவ்வாறு செயற்படுவது நல்லதாகவும் இருக்கலாம் மோசமானதாகவும் இருக்கலாம்.  இவ்வாறான நிலைமையில்  பட்டலந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் அதன் பாதிப்பு அரசாங்கத்துக்கு ஏற்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் பட்டலந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் அதன் பாதிப்பு அரசாங்கத்துக்கு ஏற்படும்.

உண்மையில் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டியதொன்றாகும். ஜனநாயக ரீதியில், தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த கட்சி ஒன்று, தோட்டாக்களினால் ஆட்சி செய்ய முடியாது.

எடுத்துக்காட்டாக, 1987ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலுக்கு வேற்புமனு கோரப்பட்டிருந்தது. தேரதலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வீட்டு வாசலில் வேட்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி தொங்கவிடுமாறு அன்று இருந்த ஆயுத படை ஒன்று அறிவித்திருந்தது.

இராஜினாமா செய்யாத வேட்பாளர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதனால் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாமல் போனது.

அதனால் ஜனநாயகத்துக்கு தோட்டாவால் அச்சுறுத்தல் ஏற்படும்போது பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தின் பிரகாரம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம்  ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. அவ்வாறு செயற்படுவது நல்லதாகவும் இருக்கலாம் மோசமானதாகவும் இருக்கலாம்.

அதனால் இவ்வாறான நிலைமையில் அதுதொடர்பில் மீண்டும் கதைப்பதால் பாதிப்பு ஏற்படப்போவது ஆளும் அரசாங்கத்துக்கே அன்றி வேறு யாருக்கும் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதேவேளை, அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் 77 வருடங்களாக நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா முதல் 100 ரூபா வரை இருந்தது.

அதனால் மக்களுக்கு வாழ்வது மிகவும் கஷ்டமான நிலை என தெரிவித்து ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் சம்பளத்தை 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க  ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

தேங்காய் விலை 80, 100 ரூபாவாக இருக்கும்போதே ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் தற்போது தேங்காய் ஒன்றின் விலைக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை 50ஆயிரம் ரூபா வரை அதிகரித்திருக்க வேண்டும்.

அரச துறை மாத்திரமல்லாது ஒட்டுமொத்த இலங்கையின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சம்பள அதிகரிப்பில் அரச துறையில் மத்திய நிலையில் இருப்பவர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் 2இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் கைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்தது. ஆனால் தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்ய 6,7 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது.

தவணை அடிப்படையில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் அன்று, எடுக்கும் சம்பளத்தில் 12ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது 40 ஆயிரம் ரூபா வரை செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

அதனால் இதன் பெறுபேறு எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது கிடைக்கும். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான நிலைக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும் என்பதை எனது அரசியல் வாழ்க்கை அனுபவத்தில் தெரிவிக்கிறேன் என்றார்.