நாட்டில் நடத்திச் செல்லப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி,உயர் கல்வி,தொழிற்கல்வி அமைச்சின் பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவை தொடர்பில் அரசாங்கம் கவனமெடுத்துள்ளது. அதற்கு அமைவாக அந்நிறுவனங்களின் பாடத்திட்டங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
அதேநேரம், உள்நாட்டில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்கள் இயங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவை தற்போது முதலீட்டு சபையில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆகவே அவற்றின் பதிவுகள் தொடர்பிலும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.