மேற்கு கடற்கரையில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று (12) காலை கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை அதிகாரிகள் குழு ஒன்று மீன்பிடி படகை கைப்பற்றியது.
அதன்படி, குறித்த மீன்பிடி படகு இன்று பிற்பகல் திக்கோவிட்ட மீன்வள துறைமுகத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையின் போது, 100 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மீன்பிடி படகில் இருந்த 6 மீனவர்களை கடற்படை கைது செய்துள்ளது.
குறித்த நபர்கள் தெவுந்தர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், திருகோணமலைப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 200 கோடி ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் போதைப்பொருள் கையிருப்பையும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது