ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனுக்கு எதிராக எந்தக்குற்றச்சாட்டுக்களும் இல்லை

11 0

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலையாகி இருக்கும் இளைஞனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வந்து கையொப்பமிட வேண்டுமென பணித்துள்ளதன் மூலம் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றினை விசாரணை செய்த ஆளைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக 22 வயது இளைஞன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்துவைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் சர்வதேச ரீதியில் வந்த அழுத்தம் மற்றும் அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களின் கோரிக்கை காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரமழான் மாதத்தில் இஸ்ரேல் இராணுவம் 200 குழந்தைகளை கொலை செய்த மன வேதனையிலே குறித்த இளைஞன் ஸ்டிகர் மூலம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அதனாலே அவரை கைதுசெய்து 90 நாட்கள் தடுத்துவைத்தார்கள்.

ஆனால் அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்காததால் கடந்த திங்கட்கிழமை குறித்த இளைஞனை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. ஆனால் எந்த குற்றச்சாட்டும் இல்லாத அந்த இளைஞன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வந்து கைச்சாத்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல, குறித்த இளைஞன் பிணையில் விடுதலையாகி வீட்டுக்கும் வரும்போது, அவர் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் இருந்து அவரை தொழிலில் நிறுத்தியுள்ளதாக கடிதம் வருகிறது. பொலிஸாரின் பேச்சைக்கேட்டு ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதன் காரணமாக அந்த இளைஞனின் இளமை வாழ்க்கை கேள்விக்குள்ளாகி உள்ளது.

அதேபோன்று ஏறாவூரில் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கவிதை எழுதிய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி இருக்கிறது.அதேபோன்று போராட்டம் ஒன்றை ஏற்பாடுசெய்த ஒருவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் ஸ்டிகர் எங்கே எனக் கேட்கின்றனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க சென்றவர்களிடம், இஸ்ரேல் பிரதமருக்கு ஏன் பயங்கரவாதி என தெரிவிக்கிறீர்கள், பலஸ்தீனில் சிறுவர்கள் கொலை செய்யப்படுகவதற்கு  இங்கு ஏன் போராட்டம் செய்ய வேண்டும் என அரசாங்கத்தின் பொலிஸார் கேடட்கின்றனர்.

அரசாங்கத்தின் சபை முதல்வர் பலஸ்தீன் ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவராக இருக்கிறார். நான் பிரதி தலைவர். நாங்கள் அனைவரும் பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் மேற்கொண்டவர்கள். அவ்வாறு இருக்கும்போது பொலிஸாரின் பைத்தியகார செயல் என்ன?. வருகை தரும் விசாவில் இஸ்ரேலியர்கள் நாட்டுக்கு வந்து சட்டவிராேதமான முறையில் இங்கு வியாபாரம் செய்கிறார்கள்.

இதற்கு எதிராக யாரையும் பொலிஸார் இதுவரை கைதுசெய்யவி்லலை. கொழும்பில் இஸ்ரேலிலன் இரண்டு கலாசார நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இது சட்டவிராேம் என பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் அந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

வருகை தரும் விசாவில் நாட்டுக்கு வந்து வியாபாரம் செய்யும் ஒரு இஸ்ரேல் பிரஜையை பொலிஸார் கைது செய்திருக்கிறதா? ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்துனேசியாவில் இருந்து வருகை தரும் விசாவில் வந்த சிலர் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து பொலிஸார் அவர்களை கைதுசெய்து 14 நாட்கள் தடுத்து வைத்திருந்தார்கள்.

இஸ்ரேல் காரர்களுக்கு அரசாங்கம் ஏன் இந்தளவு பயம்?  என கேட்கிறேன். சட்டவிராேதமாக நடமாடும் இஸ்ரேல் காரர்களை கைதுசெய்வதில்லை. ஆனால் அரசாங்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக கைதுசெய்கிறது. நாட்டை ஆட்சிசெய்த எந்த ஜனாதிபதிக்கு கீழும் இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட்டதற்கு இந்தளவு யாரும் நெருக்கடிக்கு ஆளாகவில்லை. ஆனால் பலஸ்தீனுக்கு ஆதரவளித்துவந்த தற்போதுள்ள அரசாங்கம்  6 மாதங்களில் இவ்வாறு மாறி இருப்பது குறித்து கவலையடைகிறோம்.

சிலவேளை, அரசாங்கத்தை அசெளகரியத்துக்குள்ளாக்க பொலிஸார் இவ்வாறு சதித்திட்டம் செய்கிறார்களோ தெரியாது. இதுதொடர்பாகவும் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.