மட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரமளிக்கும் சட்டம் எது ?

28 0

பலாலி வீதி அமைந்துள்ள பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்ட ரீதியாகப் பிரகடனப்படுத்தப்படாத நிலையில், இரவு வேளையில் அவ்வீதி ஊடாகப் பயணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு யார் அதிகாரம் அளித்தது எனக் கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தேர்தல்கள் நெருங்கும்போது மாத்திரம் தான் வீதிகள் திறக்கப்படுமா? எனவும் வினவியிருக்கிறார்.

யாழ்ப்பாணம் – பலாலி வீதி 34 வருடங்களுக்குப் பின்னர் வாகனப் போக்குவரத்துக்காக  வியாழக்கிழமை (10) திறக்கப்பட்டது. இருப்பினும், அவ்வீதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக்குடியிருப்பின் ஊடாகச் செல்லும் வீதி என்பதனால், அவ்வீதியின் ஊடாகப் பயணிக்கும்போது பின்பற்றப்படவேண்டும் எனக் குறிப்பிட்டு 7 விடயங்கள் அடங்கிய அறிவித்தல் பலகையொன்று வீதிக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வீதி மு.ப 6.00 – பி.ப 5.00 மணி வரை மாத்திரமே திறக்கப்படும், வீதியினுள் பணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல் மற்றும் திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது. வீதியில் பயணிக்கும்போது வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் மற்றும் ஒளிப்பதிவு செய்தல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வீதியில் நடைபயணம் தடைசெய்யப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து பேரூந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை, இவ்வீதியில் பயணிக்கக்கூடிய ஆகக்கூடிய வேகம் 40 கிலோமீற்றர் மாத்திரமேயாகும். இவ்வீதியில் பயணிக்கும் சாரதிகள் உள்ளடங்கலாக சகலரும் பயணத்தின்போது தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம் என்பனவே அந்த அறிவுறுத்தல்களாகும்.

அதேவேளை இந்த அறிவுறுத்தல்களை மீறுவது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளத்தக்க குற்றமாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டுப்பாடுகளுடன் எனினும் பலாலி வீதி திறக்கப்பட்டமையைத் தாம் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக உத்தரவாதம் அளித்தவர்களால் எவ்வாறு சட்டவிரோத மட்டுப்பாடுகளை விதிக்கமுடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘இது அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்ட ரீதியாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்கையில் மாலை 6.00 முதல் அதிகாலை 5.00 வரை அவ்வீதியில் பயணிப்பதைத் தடுப்பதற்கு எந்தச் சட்டம் உங்களுக்கு அதிகாரம் அளித்தது?’ என்றும் சுமந்திரன் அரசாங்கத்தை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ‘நடைபயணிகள் இவ்வீதியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாதது ஏன்? அதனைவிட முக்கியமான கேள்வி என்னவெனில், தேர்தல்கள் நெருங்கும்போது மாத்திரம் தான் வீதிகள் திறக்கப்படுமா?’ எனவும் அவர் வினவியுள்ளார்.