இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கறுப்பு கொடி போராட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மோடியின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக மே தினக் கூட்டத்தின்போது ஒன்றிணைந்த எதிரிணியினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கண்டனம் வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய் நாட்டை தாரை வார்ப்பதற்காக இந்தியாவுடன் உறவுகளை பேணவில்லை என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், தாய் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையும், எந்தவொரு நாட்டுடனும் கைச்சாத்திடப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.