அம்பாறை மாவட்டம் வீரமுனைக் கிராமத்து மக்களை இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பிரதேசத்து மக்கள் பீதியில் வாழ்கின்றனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வீரமுனை மக்கள் அண்மைக்காலமாக தமது பிரதேசத்தில் தம்மைக் குடியமர்த்துமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கு இராணுவத்தினரும், வனவளப் பாதுகாப்புப் பிரிவினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து இம்மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிட்டு எந்தவொரு பலனும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீருடையில், ஆயுதங்களுடன் வரும் குறித்த நபர்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரங்களிலும், அதிகாலைப் பொழுதுகளிலும் குழுவாக வரும் இவர்கள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தாம் அச்சம் கலந்த சூழலில் வாழ்வதாகவும், பாதுகாப்புத் தரப்பினர் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரமுனைக் கிராமமானது யுத்த காலங்களிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் பல தடவைகள் படுகொலைகளுக்கு உள்ளாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.