ராமேஸ்வரம் ரயில் நிலைய சீரமைப்புப் பணி டிசம்பரில் முடியும்: அஸ்வினி வைஷ்ணவ்

14 0

 ராமேஸ்வரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாம்பன் புதிய தூக்கு பாலம் திறப்பு விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பேசியதாவது:
ராம நவமி நாளில் பாம்பன் தூக்கு பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறியியல் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் ஒரு அதிசயம். இந்தியாவில் முதல் செங்குத்து கடல் தூக்கு பாலம் இதுவே. தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைக்கும் இந்தப் பாலம் தேசிய வளர்ச்சிக்கான கனவின் மைல்கல். இது தமிழகத்தின் எழுச்சி. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரயில் திட்டங்களுக்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே திட்டங்களுக்கு சிறிய தொகைதான் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் நிறைய ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுகின்றன. அதில் ராமேஸ்வரம் ரயில் நிலையமும் ஒன்று. ராமேஸ்வரம் ரயில் நிலையம் அழகாக வடிவமைக்கப்பட்டு வருகிறது டிசம்பர் மாதத்தில் பணிகள் முடியும். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த மாநில அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ராமபிரான் வந்த ராமசேதுப் பாதை வழியாக சிறப்புக்குரிய ராம நவமி நாளில் வந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்த பிறகு தமிழகத்துக்கு முதல் முறையாக இலங்கை அரசின் உயரிய விருதை பெற்று இங்கு வந்துள்ளார். தமிழகத்துக்கு பிரதமர் வரும்போதெல்லாம் மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் தருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தந்துள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை போற்றும் பிரதமர், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தி பெருமை சேர்த்தார். திருவள்ளுவர் கலாச்சர மையத்தை உலகம் முழுவதும் அமைத்து வருகிறார். தமிழையும், தமிழ் அன்னையையும் போற்றி வரும் பிரதமராக மோடி இருக்கிறார். இவ்வாறு எல்.முருகன் பேசினார்.