1999ஆம் ஆண்டு மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கருணாவே கட்டளையிட்டார் என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் வாய் மூல கேள்வி நேரத்தின் போது, பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“1999ஆம் ஆண்டு மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு உயர் மட்டங்களில் இருந்து கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு கட்டுப்பட்ட வேண்டியிருந்ததுடன், பொலிஸார் பலரும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு உயர் மட்டங்களில் இருந்து யார் கட்டளையிட்டது?
அவர்களை அடையாளம் கண்டுள்ளீர்களா?” என பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாகல ரத்னாயக்க,
“முன்னாள் இராணுவத்தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகவை சிறையில் அடைப்பதற்கு யார் உத்தரவிட்டது? அதனை மகிந்த தரப்பினர் வெளிப்படுத்த வேண்டும்.அவ்வாறு வெளிப்படுத்தினால் விடுதலைப் புலிகளுக்கு பொலிஸாரை கீழ்படியுமாறு கட்டளையிட்டவரை அறிவிக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து “கருணாவே கொலைகளுக்கு கட்டளையிட்டார்” என ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதிவி வகித்த கருணாவிடம் இதனை கேட்டிருக்க வேண்டும். அவரே கொலைகளுக்கு பொறுப்பானவர் என அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.