புதுவை முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது

299 0

அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கினார்.

அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

இதில் புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது, ஓவியாவுக்கு ‘பெரியார் ஒளி’ விருது, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றனுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது, ஹென்றி தியாகராஜனுக்கு ‘காமராஜர் கதிர்’ விருது, தர்வேஷ் ரஷாதிக்கு ‘காயிதேமில்லத் பிறை’ விருது, இளங்குமரனாருக்கு ‘செம்மொழி ஞாயிறு’ விருது வழங்கப்பட்டது. பின்னர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் சிறப்பாக தொண்டாற்றுவோரை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியே இந்த விழாவின் நோக்கம் ஆகும்.

இந்த ஆண்டுக்கான விருதுபெறும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ஆகவே, அவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரிய சாதனையாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதில் பெருமைப்படுகிறேன்.

இன்று தமிழக அரசியல் சூழல், மிகுந்த கவலைக்குரியதாக மாறிவருகிறது. ஒரு செயற்கையான, திட்டமிட்ட நெருக்கடி நிலை நம்மீது திணிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னவாகும்? ஒரே நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்குமா?

சாதியவாத, மதவாத சக்திகளை அணிதிரட்டி தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தூண்டப்படுமா? திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்னும் பெயரில், சமூகநீதி அரசியலுக்கு வேட்டு வைக்கப்படுமா? இப்படி எண்ணற்றக் கேள்விகளை எழுப்பும் வகையில் இன்றைய தமிழக அரசியல் நிலைமை உள்ளது.

இந்நிலையில், முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட முன்வரவேண்டும். தமிழகத்தைச் சூழ்ந்து வரும் சாதிய, மதவாத ஆபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றிட ஓரணியில் திரளவேண்டும்.

ஊழல், மது போன்ற தீங்குகளை ஒழிக்கவேண்டியது எவ்வளவு முக்கியமோ அதைவிட, சாதியவாத, மதவாத அரசியல் தீங்கில் இருந்து தமிழகத்தையும், இந்திய தேசத்தையும் பாதுகாத்தாக வேண்டும்.

அகில இந்திய அளவில், பரவிவரும் மதவாத அரசியல் குறிப்பாக, தலித், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் மிகவும் ஆபத்தானதாகும். இதனைத் தடுப்பதும், ஒழிப்பதும்தான் தற்போதைய சவாலாக உள்ளது. அந்தவகையில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த ஒற்றைச் செயல்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரள வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாக உள்ளது.

எனவே, அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும், ஜனநாயகச் சக்திகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறது. குறிப்பாக, இந்திய அளவில் இடதுசாரிகள் துணிந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

மதவாத அரசியலுக்கும் தேசிய நலன்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை, முதன்மை முரண்பாடுகளாக முன்னிறுத்தி இந்திய தேசத்தை மதவாதச் சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதையே முதன்மை சவாலாக ஏற்று, தலித்துகளோடும், பழங்குடியினரோடும், சிறுபான்மையினரோடும், அவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளோடும் கைக்கோர்த்திட துணிந்து முன்வர வேண்டும் என இடதுசாரிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.