தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உரிய அனுமதியின்றி விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கீகாரம் இல்லாத நிலத்திற்கு பத்திர பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பத்திர பதிவுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத மனைகள் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தபிறகும் அதிகாரிகள் அதை மீறி எப்படி செயல்படலாம்?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தலைமை வக்கீல் ஆஜராகி பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், ‘‘அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறை படுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதி முறைகளை உருவாக்கி இருக்கிறது. அந்த விதிமுறைகளுக்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி விட்டது.அந்த விதிமுறைகள் என்னென்ன என்பது நாளை (இன்று) வெளியிடப்படும்’’ என்று கூறினார். இதையடுத்து, நீதிபதிகள் ‘‘தமிழக அரசின் புதிய விதிகளை ஐகோர்ட்டில் சமர்ப்பித்து அதன் நகலை மனுதாரர்களுக்கும் வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டபடி தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது. அது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்துள்ள அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறை விதி 2017 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், டவுன் பஞ்சாயத்தில், செயல் அதிகாரியும், கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் இந்த நிலங்களை வரையறை செய்யும் தகுதியான அதிகாரிகள் ஆவார்கள்.
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தின் உரிமையாளர்களும் இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து, தங்களது நிலத்தை வரையறை செய்து கொள்ளலாம்.இந்த நிலங்கள் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும். இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும்.
அதன்படி, மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 வீதமும், நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60 என்றும் கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.30 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.அங்கீகாரம் இல்லாத இந்த வீட்டு மனைகளில் மேம்படுத்துவதற்கு என்று தனி கட்டணமும் செலுத்த வேண்டும். மேம்பாட்டு கட்டணமாக, மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.600 சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.350, முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.250, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150, கிராமபஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 என்றும் செலுத்த வேண்டும்.
இதுதவிர வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மாநகராட்சி என்றால் குறைந்தது 4.8 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நகராட்சி மற்றும் கிராமபஞ்சாயத்து பகுதிகளில் குறைந்தது 3.6 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில், திறந்தவெளி பொது நிலத்தை விட வேண்டும். இந்த திறந்தவெளி பொது நிலம் விடாமல், வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்தால், அந்த ஒட்டுமொத்த வீட்டு மனைகளின் மதிப்பில் 10 சவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த வீட்டு மனைகளை வரையறை செய்வது குறித்து ஆய்வு செய்ய, ஒரு வீட்டு மனைக்கு ரூ.500 என்ற வீதம் கட்டணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசூலிக்க வேண்டும். அதன் பின்னர் ஆய்வுகளை செய்ய வேண்டும்.இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை இந்த புதிய விதிகளின் படி கட்டணம் வசூலித்து வரையறை செய்வதால், அந்த வீட்டு மனையில் அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களையும் வரையறை செய்து விட்டதாக அர்த்தம் இல்லை. இந்த அங்கீகாரம் இல்லாத சட்டவிரோத கட்டிடங்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ள உரிமை உள்ளது.
இனி வரும் காலங்களில் வீட்டு மனைகளை அமைக்கும் போது மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெறவேண்டும். அதாவது, விவசாய நிலம், நீர்நிலைகள் உள்ள நிலம், அல்லது அந்த நீர்நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் வீட்டு மனைகளை உருவாக்க அனுமதி வழங்கக்கூடாது.
வீட்டு மனைகளை உருவாக்கும் நபர்கள், இது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்டத்தில் உள்ள விவசாயத் துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த அதிகாரிகள் அந்த நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அதன்பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி வீட்டு மனைகளை அமைக்க அனுமதி வழங்கலாம்.
ஆறு, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீடுகள் கட்டுவதற்கு மாற்றக்கூடாது. அரசு நிலம், கோவில் நிலம், வக்ப்போடு நிலம் ஆகியவற்றிலும் வீடு-கட்டிடம் கட்ட அனுமதி இல்லை.உரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.20-10-2016 முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரையறுத்து அங்கீகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு வேளாண் இணை இயக்குநரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.