மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

316 0

நீதிமன்ற உத்தரவு எதிரொலியால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீதம் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம், மனித சங்கிலி, கடவுளுக்கு பலூன் மூலம் கோரிக்கை, மருத்துவரை உயிரோடு சமாதி கட்டுதல் போன்ற நூதன போராட்டங்கள் மூலம் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கடந்த மாதம் 19-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்புமாறு ஐகோர்ட் நீதிபதிகள் இன்று கூறி இருந்தனர். அதேபோல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்கள் சங்கத்தில் 90 சதவீதம் மருத்துவர்கள் உள்ளதாக தாங்கள் தனிப்பட்ட முறையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
முன்னதாக, மருத்துவர்களுடன் மீண்டும் சுகாதரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அப்போது சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.