பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ராணுவத்துக்கு எதிரான வெறுப்புணர்வுடன் மக்களை தூண்டி விட்டதாக அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகளை குவித்துள்ளதாக ‘பனாமா லீக்ஸ்’ இணையதளத்தில் இருந்து கசிந்த ரகசிய தகவல்களினால் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகி பெரும் பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது அந்நாட்டை சேர்ந்த பிரபல வழக்கறிஞரான இஸ்தியாக் அஹமது மிர்ஸா என்பவர் ராவல்பிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சமீபத்தில் வாட்ஸ் அப் மூலம் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கருத்துகள் ராணுவத்துக்கு எதிரான வெறுப்புணர்வுடன் மக்களை தூண்டி விடும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை ராவல்பிண்டி போலீசார் தங்களது பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். எனினும், அவர் மீது முதல் தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யப்படவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.