நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ சங்கத்தினருடன் இணைந்து ஒரு சில தொழிற்சங்கங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்க மருத்துவ சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக இன்று மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுதிகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், எவ்வித சிகிச்சைகளும் இடம்பெறவில்லை எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்த மக்கள் ஏமற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் மக்கள் வெளிநோயாளர் பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாதையில் கொழும்பு மலபே சைட்டம் எனும் நிறுவனத்தினால் காசுக்கு பட்டத்தை எடுத்து தகுதியற்றவர்கள் வைத்தியர்களாக வந்து இந்த வைத்தியசாலையில் உங்களுக்கு சிகிச்சையளிக்க இருப்பதால், அதற்கு எதிராக உங்களின் பாதுகாப்பைக்கருதி வைத்திய வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்க மருத்துவ சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் நகரில் உள்ள சில பாடசாலைகளும் இன்று இயங்கவில்லை.
சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளிக்காததன் காரணத்தினால் பாடசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதேவேளை மன்னாரில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமது சேவையினை வழமை போல் மேற்கொண்டு வருவதோடு, மன்னாரில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வழமைபோன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக அரசாங்க மருத்துவ சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு பல்வேறு துறை தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.