உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே பட்டலந்த ஆணைக்குழு விவகாரம் அரசாங்கத்தால் பெரிதுபடுத்தப்படுகிறது. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் வழமை போன்று இந்த காரணி இயற்கையாக மரணமடைந்துவிடுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்டுக்கணக்கான பொய்களைக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் கூறிய பாரிய பொய்களில் ஒன்று தான் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை.
இது தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2000ஆம் ஆண்டு பாராளுமன்றக் குழுவொன்றின் அறிக்கையூடாக இது குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாவிட்டால் ஏனைய கட்சிகள் மீது சேறு பூசும் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே பட்டலந்த ஆணைக்குழு விவகாரம் அரசாங்கத்தால் பெரிதுபடுத்தப்படுகிறது. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் வழமை போன்று இந்த காரணி இயற்கை மரணமடைந்துவிடும். இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.