பீடி இலைகள் மீட்பு

15 0

புத்தளம் – கற்பிட்டி பராமுனை கடற்பகுதியை உள்ளடக்கிய பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் செவ்வாய்கிழமை(01) இரவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படையின் சிறப்புக் கப்பலினால் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன்போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  20 மூட்டைகளில் அடைக்கப்பட்ட 675 கிலோ கிராம் பீடி  இலைகளுடன், இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கற்பிட்டி, ஜனசவிபுர மற்றும் சிங்கபுர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.