35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்.

440 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இவர்களின் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகை மதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவு விழா அமைந்திருந்தது.

09:30மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர் திரு. கிருஸ்ணகுமார் சிவலிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலப் பொறுப்பாளர் திரு. இளையதம்பி துரைஐயா, தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. ஜெனுசன் சந்திரபாலு, நிதிப்பிரிவுத் துணைப்பொறுப்பாளர் திரு. பிரவீன் செல்வேந்திரன், வடமாநிலச் செயற்பாட்டாளர்களான தமிழ் மாணி திருமதி சுபத்திரா யோகேந்திரன், திருமதி அன்னலட்சுமி இராமலிங்கம், வடமாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர் தமிழ் வாரிதி திருமதி யமுனாராணி தியாபரன் மற்றும் பிறேமன் தமிழாலயத்தின் நிர்வாகி தமிழ் மாணி திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாச் சிறப்புடன் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் வாரிதி என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் மாணி என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கி மதிப்பளிப்புகள் நடைபெற்றன.

20 ஆண்டுகள் பணியாற்றிய கம்பேர்க் தமிழாலயத்தின் ஆசிரியை திருமதி ரவிராணி சுகிர்தன் அவர்களுக்கு தமிழ் வாரிதி என்ற பட்டமும் 25 ஆண்டுகள் பணியாற்றிய பேர்லின் தமிழாலய ஆசிரியை திருமதி சாவித்திரி தேவதாஸ், பிறேமன் 1, கம்பேர்க் ஆகிய தமிழாலயங்களின் நிர்வாகியும் ஆசிரியருமான திருமதி பர்வதபத்தினி குகேந்திரராஜா, திருமதி ராசலட்சுமி ஜெயமனோகரன் மற்றும் கொற்றிங்கன் தமிழாலயத்தின் நிர்வாகி திரு. ஜெயராசசிங்கம் கணபதிப்பிள்ளை ஆகியோருக்கு தமிழ் மாணி என்ற பட்டமும் வழங்கி மதிப்பளிப்புகள் இடம்பெற்றன.

அனைத்துலகப் பொதுத்தேர்வில் மாணவர்களுக்கான மதிப்பளிப்பும், மாணவர்கள் பெற்ற வெற்றிகளின் அறுவடையாகப் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது. அந்தவகையிலே அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் பேர்லின் தமிழாலயம் 3ஆம் நிலையைப் பெற்றமைக்கான மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.


மழலையராக இணைந்து 14 ஆண்டுகள் தமிழ்மொழிக் கற்றலில் சித்திபெற்று நிறைவுசெய்த மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அழைத்துவரப்பட்டுக் கல்வி மற்றும் தமிழ்த்திறன்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு. இராஜ. மனோகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வாழ்த்துரையும், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் பிரியாவிடை உரையும் இடம்பெற்றது. மாணவர்களின் உரை, கவிதை, எழுச்சிப்பாடல்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தமிழ்த் தேசத்தின் விடியலுக்கான நம்பிக்கையைப் பறைசாற்றியவாறு 17:00 மணிக்கு வடமாநிலத் தமிழாலயங்களின் அகவை நிறைவு விழா நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய மாநிலங்களான தென்மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் முறையே 05.04.2025, 12.04.2025 ஆகிய இரு நாள்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.