நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாத்திரம் 3 வன்முறைச் சம்பவங்கள் உட்பட 9 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலையொட்டி நாட்டில் இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இம்மாதம் 1ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 3 வன்முறை சம்பவங்கள் உள்ளடங்களாக 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் அநர்த்தம் விளைவித்தமை தொடர்பிலும், களுத்துறை அகலவத்தை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்றும், முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு வேட்பாளர்களின் உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமைத் தொடர்பில் கண்டி, தலாத்து ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
களனி, ராகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கட்சி அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டமை, பியகம பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கிரிபத்கொடை பகுதியில் கட்சி விளம்பரப் பதாகைகளை காட்சிப்படுத்தியமை ஆகியன தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் களுத்துறை அகலவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பிலும் பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கல்கிசை மொரட்டுவ பகுதியிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளதுடன், அகலவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தலை முன்னிட்டு பிரதேசவாசிகளுக்கு பணம் மற்றும் பொருட்களை விநியோகித்த சம்பவம் தொடர்பிலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளின் கீழ் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.