ஆதாரங்களுடன் சட்டப்பூர்வமாக சோதனை நடத்தினோம்: அமலாக்கத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

18 0

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழக லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் சட்டப்பூர்வமாக சோதனை நடத்தினோம் என அமலாக்கத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர். பின்னர் மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமம், மதுபான போக்குவரத்து உரிமம் போன்றவற்றில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேலாக முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் அமலாக்கத் துறையின் இந்த சோதனையையும், அதிகாரிகளிடம் பெற்ற வாக்குமூலங்கள் உள்ளிட்ட பிற ஆவணங்களையும் சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த சோதனையின் அடிப்படையில் அமலாக்கத் துறை மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தனர். பின்னர் இந்த வழக்கில் இருந்து நீதிபதிகள் இருவரும் விலகினர். இதையடுத்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்யக்கோரி சமூக ஆர்வலரான எஸ்.முரளிதரன், பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் ஆகியோர் இடையீ்ட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் டெல்லியில் இருந்து காணொலி மூலமாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜோஹப் ஹூசைன் ஆஜராகினர். இதேபோல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தனர்.

அம்மனுவில் கூறியிருந்ததாவது: அமலாக்கத் துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில் தமிழக அரசு முன்கூட்டி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. டாஸ்மாக் அதிகாரிகளிடம் வலுக்கட்டாயமாக ஆவணங்களில் கையெழுத்துப் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. அமலாக்கத் துறை திடீரென நடத்தும் சோதனைகளுக்கான வாரண்டை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த சோதனைக்கு எதிராக அமலாகக்கத் துறையிடம்தான் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியிருப்பது தவறானது. சோதனையின்போது பெண் அதிகாரிகள் பாதுகாப்பாகத்தான் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாரிகள், ஊழியர்கள் உணவருந்த, ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழக லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் சோதனை நடத்தவில்லை. அதிகாரிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறியதாக டாஸ்மாக் நிர்வாகம் வழக்குத்தொடர எந்த முகாந்திரமும் கிடையாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் வழக்குத்தொடர முடியும். ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கிலேயே அதிகாரிகளின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பி்ன்னர் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

அமலாக்கத் துறையின் சட்டப்பூர்வமான சோதனையை முடக்கும் நோக்கில் அதிகாரிகளை சட்டவிரோதமாக சிறைபிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் கூறி தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தரப்பில் கூடுதல் திருத்த மனுக்களை தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் டாஸ்மாக் அதிகாரிகளை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கூடாது. இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது. மேலும் 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறைபிடித்ததாகவும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் இதுபோல எந்த சோதனையும் நடத்தியது இல்லையா, என கேள்வி எழுப்பினர். அதற்கு பி.எஸ்.ராமன், தமிழக அரசு இதுபோல நள்ளிரவு நேரங்களில் எந்த சோதனையும் நடத்தியதில்லை என்றார். பின்னர் அமலாக்கத் துறையின் மனுவுக்கு பதிலளி்க்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு தமிழக அரசும், தமிழக அரசு தாக்கல் செய்த கூடுதல் திருத்த மனுக்களுக்கு அமலாக்கத் துறையும் இடையீட்டு மனுக்களுக்கு அனைத்து தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.8-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.