வேங்கைவயல் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தக் அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி வேங்கைவயலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையிடம் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, வேங்கைவயலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “வேங்கைவயல் சம்பவத்துக்குக் காரணம் இரு தனி நபர்களுக்கு இடையேயான பிரச்சினைதான். இந்த வழக்கில் தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில் சிலருக்கு மரபணுச் சோதனை நடத்தப்பட்டது. அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தி உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது” என்றார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “வேங்கைவயலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து காவல் துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.