அச்சுறுத்தலாக மாறியுள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது தெருநாய்க்கடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சிக்கல். சென்னையில் பல மருத்துவமனைகளுக்கு வெறிநாய் கடித்து சிகிச்சை பெறுவதற்கு தினமும் குறைந்தது 3 பேராவது வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிற பகுதிகளிலும் இதே நிலைதான். தமிழகத்தில் 2025-ம் ஆண்டு பிறந்த பிறகு கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாவில் சாலை விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளில் 21 சதவீதத்துக்கு காரணமான விபத்துகள் தெரு நாய்களால்தான் ஏற்படுகின்றன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இழப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படாததற்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடின்மையும், அலட்சியமும் முதன்மை காரணம் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் மாநில அரசையும், உள்ளாட்சி அமைப்புகளையும் மட்டுமே குறை கூறுவது பொருளற்ற செயல் ஆகும்.
தெருநாய்களால் மனிதர்கள், குறிப்பாக சிறுவர்களும், குழந்தைகளும் கடிக்கப்படுவதற்கு முதன்மைக் காரணம் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதுதான். இன்றைய நிலையில் இந்தியாவில் சுமார் 4 கோடி நாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாய்களின் எண்ணிக்கை வேகமாக பெருகுவதற்கு மக்கள் தான் காரணம் ஆவர். தெருநாய்களுக்கு தாராளமாக உணவு வழங்கப்படுவதும், உணவுக் கழிவுகளையும், மக்காத கழிவுகளையும் பல இடங்களில் கொட்டி அவற்றை நாய்களின் வாழிடமாக மாற்றுவதும் தான் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்க காரணம்.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது தான் நிரந்தரத் தீர்வு ஆகும். ஆனால், இது எளிதானதோ, உடனடியாக சாத்தியமாவதோ அல்ல. தெரு நாய்களில் 70 சதவீதத்துக்கும் கூடுதலாக கருத்தடை செய்தால் மட்டும் தான் நாய்களின் எண்ணிக்கைக் குறையும். அதற்கும் கூட குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும் என்று கடந்த கால அனுபவங்கள் கூறுகின்றன. அடுத்த தீர்வு, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது ஆகும். இது ஓரளவு குறைந்த காலத்தில் பயனளிக்கக்கூடும். ஆனால், இந்த இரு தீர்வுகளையும் செயல்படுத்துவதற்கு பெரும் நிதி, கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவை தேவை.
வெறிநாய்க் கடிக்கான உடனடி தீர்வுகளில் ஒன்று ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவதும், மிகவும் ஆபத்தான நாய்களை தவிர்க்க முடியாத சூழலில் கருணைக்கொலை செய்வதும்தான். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றை கருணைக்கொலை செய்வதில் தவறு இல்லை என்று 2017-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவும் பெரும் செலவு பிடிப்பவை தான். தெரு நாய்க்கடி சிக்கலுக்கு அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது. புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் மூலமாக தெருநாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதை தொடர் இயக்கமாக அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.