மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடிப்பு ; காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு

22 0

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் பூச்சோங் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றிய சம்பவத்தில் 112 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு, 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியவில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றியுள்ளது. தீ வானை எட்டும் உயரத்தில் கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.

இச்சம்பத்தில் அப்பகுதிக்கு அருகில் இருந்த 190 வீடுகள் சேதமடைந்துள்ளன. 148 கார்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களும் காயத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பாளர்கள் பலர் வெப்பத்தைத் தாங்க முடியாமல் திணறியுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கும் தற்காலிக இடமாக, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ்சில் உள்ள ஒரு வழிப்பாட்டுத் தலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தீக்காயங்கள், காயங்கள் மற்றும் சுவாசிப்பதற்கு சிரமப்படுவர்களுக்கு வழிப்பாட்டுத தலம் வளாகத்தைச் சுற்றிலும் சுகாதாரப் பணியாளர் சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டிருந்ததை Petroliam Nasional Berhad, பெட்ரோனாஸ் உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த எரிவாயு குழாய் மூடப்பட்டுள்ளதாகவும் அனைத்து முக்கிய தரப்பினருக்கும் இது தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெட்ரோனாஸ் அகப்பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.