தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை கைது

15 0

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

தாமரை கோபுர நிர்வாகம், பாராசூட் தடை குறித்து அந்த அமெரிக்கருக்கு தெரிவிக்காததே அதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், அது இரத்து செய்யப்பட்டமை குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர், பாராசூட்டின் உதவியுடன் உயரமான இடங்களிலிருந்து குதிப்பது தனது பொழுதுபோக்காக இருப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், தாமரை கோபுரத்திலிருந்து குதித்த பிறகு, அவர் அருகிலுள்ள பள்ளியில் பாதுகாப்பாக தரையிறங்கினார், பின்னர் கைது செய்யப்பட்டார்.

அந்த வெளிநாட்டவர் ஒரு அனுபவம் வாய்ந்த பாராசூட்டர் என்றும், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து குதித்து அந்தக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.